Flash News

aym shaik இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

HTML lessons

செவ்வாய், ஏப்ரல் 23, 2013

சுயமருத்துவம் நமக்கு வேண்டாம்





சுயமாகச் சம்பாதிக்கலாம்; சுயமாகச் சிந்திக்கலாம். ஆனால், நமக்கு ஏற்படும் நோய்களுக்கு நாமே சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளலாமா?

மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தங்கள் உடல் பிரச்னைகளுக்கு தாங்களே மருந்து எடுத்துக்கொள்ளும் இந்த சுயமருத்துவம் (Self Medication), ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும்'

பொதுவாக, மருத்துவர்கள் மருந்து எழுதிக்கொடுப்பது, மருந்து செயல்படும் கால அளவைப் பொருத்தது. 'இந்த மருந்தை

இத்தனை தடவை, இத்தனை நாள் சாப்பிட்டால் உங்களுக்கு முழுதாகச் சரியாகும்' என்று அவர்கள் சொல்வது.. மெகா மெகா புத்தகங்களை நாலைந்து வருடங்கள் மாறி மாறிப் படித்த அறிவின் அடிப்படையில். அதை விடுத்து, மருந்து பற்றிய சில்லறை அறிவோடு நாம் நமக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், மருந்தாகச் செயல்படாமல், இன்னும் பல நோய்களுக்குப் பாதை போடும் பணியைத்தான் செய்கின்றன

நாம் உட்கொள்ளும் மருந்துகள் பல முகம் கொண்டவை. சிலசமயம், இரண்டு மருந்துகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு, மருந்தின் பயன்பாட்டை முறித்துவிடும்! இது தானாக மருந்து வாங்கி சாப்பிடும் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நம் மருத்துவர் என்றால், மருந்துகளோடு அதை எடுத்துக் கொள்ளும் முறையையும் நிதானமாக நமக்குக் கிறுக்கல் எழுத்தில் எழுதித் தருவார்.
சில மருந்துகள், நாம் எடுத்துக்கொள்ளும் உணவோடு சண்டை போட்டு, வேலை செய்யாமல் கோபித்துக்கொள்ளும். இதை, 'டிரக் ஃபுட் இன்ட்ராக்ஷன்' (Drug Food Interaction) என்பார்கள். டாக்டர், ஆதிகாலத்தில் எழுதித்தந்த மருந்து சீட்டையே வைத்துக்கொண்டு, அதே மருந்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வரும்போது, ஒரு கட்டத்தில் அது வேலை செய்யாமல் போய்விட வாய்ப்பு அதிகம். அதை 'டிரக் ரெஸிஸ்டன்ஸ்' (Drug - Resitance) என்பார்கள்.

இதிலுள்ள இன்னொரு சிக்கல், நீங்களே பெயர் சொல்லி மருந்து வாங்கி சாப்பிடும்போது உங்கள் மருந்துக் கடைக்காரர் தவறான மருந்துகளை தந்து விடவும் வாய்ப்புண்டு. இதை டிரக் மிஸ்மேட்ச் (Drug- Mismatch) என்பார்கள். 'சரியாகப் பயிற்சி பெறாத, மருத்துவம் சார்ந்த படிப்பில்லாத, வெறும் அனுபவ அறிவு மட்டும் கொண்ட போலி பார்மஸிஸ்டுகள்தான் நிறைய கடைகளில் மருந்துகளை விற்கும் வேலையில் இருக்கிறார்கள்' என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று! ஆக, எப்போதும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மருந்துக் கடைக்குச் செல்வது உத்தமம்! மருந்துகளை நீங்களாக சாப்பிட்டுப் பார்த்து சோதித்துக்கொள்ள, நீங்கள் ஆய்வுக்கூட எலிகள் அல்ல!

ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நாள்பட்ட உபாதைகள் இருக்கும் நோயாளிகள், இப்போது தாங்களாகவே வலி மருந்து எடுப்பதால், ஆஸ்துமா திடீரென்று அதிகமாகி மிகவும் மோசமான நிலைமையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

சிறுநீரகக் கோளாறுகள், இறுதியில் சிறுநீரகச் செயல் இழப்பாகத் தீவிரமடைய ஒரு முக்கிய காரணம்... மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கண்டபடி சக்தி வாய்ந்த வலி மாத்திரைகளை விழுங்குவதுதான். அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதால் வயிற்றில் புண் ஏற்பட்டு, அது ரத்தக் கசிவை ஏற்படுத்தும் அபாயமும் உண்டாகிறது. சில வலி மருந்துகள் உட்கொள்பவரை அடிமைப்படுத்தும் (Addiction) தன்மை கொண்டவை. நார்கோட்டிக் பெயின் கில்லர் (Narcotic pain killer) எனப்படும் இம்மருந்துகள், முறையான மருத்துவர் பரிந்துரை இல்லாமல் லாப நோக்கில் கடத்தப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. அடிக்கடிச் செய்தித் தாள்களில், 'விமானம் நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள போதை பொருளாகப் பயன்படுத்தப்படும், மயக்க மருந்தான 'கீட்டமின்' (ketamine) பறிமுதல் செய்யப்பட்டது
என்றொரு செய்தியைப் பார்க்கிறீர்களே... அது இந்த வகைதான். மைக்கேல் ஜாக்சனின் துர்மரணம்கூட சுயமருத்துவம் சம்பந்தப்பட்ட மர்மமாக இன்னும் தொடர்கிறதே

தலைவலி, வயிற்றுவலி, நெஞ்சுவலி போன்றவை வர காரணங்கள் பல தன் தலைவலிக்கு, 'மைக்ரேன்' (migraine) என்று கூறி மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார் ஒரு பதினாறு வயதுப் பெண். நான்கு நாட்களில் சுயநினைவை இழக்கும் நிலைக்குச் செல்ல, மருத்துவரிடம் சென்றதில், அவளது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதுதான் தலைவலிக்குக் காரணம் என்பது தெரிந்தது. இது ஒரு உதாரணம்தான். தனக்கு வந்திருப்பது ஆபத்தான நோய் என்பதுகூடத் தெரியாமல், நிதானமாக மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கூட்டம் இங்கே அதிகமாகவே இருக்கிறது''

"வியாதி என்னவென்றே அறியாமல் கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதால், அந்த வியாதி இன்னும் முற்றிவிடும். உதாரணமாக, அதிகளவு உடம்பு வலி மாத்திரைகளால் சிறுநீரகம் செயல் இழக்கலாம். மற்றவருக்கு கொடுக்கப்படும் மருந்தை, தான் எடுத்துக் கொள்வதால் சில பக்க விளைவுககளும் ஏற்படலாம். சர்க்கரை வியாதி வந்து சில நாட்களே ஆனவர்களும், பல வருடங்களாக சர்க்கரை வியாதி உள்ளவர்களும் எடுக்கும் மருந்தில் வித்தியாசம் உண்டு. ஆனால், ஜூனியர்கள், சீனியர்களின் மருந்தை அவர்களாகவே வாங்கிச் சாப்பிட, உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து, மயக்கம்கூட ஏற்படலாம். மொத்தத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் என நினைத்தோ, மருத்துவமனை செல்ல சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டோ மருந்துக் கடைகளில் மருந்தை வாங்கி விழுங்கினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு வாழ்க்கை முழுவதும் செலவு செய்ய நேரிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக